(இன்ஷா அல்லாஹ், இந்த கட்டுரை ஜகாத் பற்றிய தெளிவு கிடைக்க துணை புரியும்.)
இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைத் தூண்களில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 14 நூற்றாண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் எந்தக் காலத்திலும் எடுத்து வைக்கப்படாத சில காரசாரமான விவாதங்கள் சமீபகாலமாக தமிழ் இஸ்லாமிய சகோதரர்களிடையே நிலவி வருகிறது. குறிப்பாக
1) ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?
2) கடமையான ஜகாத்தை எப்போது வழங்க வேண்டும்? அதற்கான கால வரம்பு என்ன?
3) “ஜகாத்” செல்வத்தை தூய்மைப் படுத்துகிறதா? மனிதனைத் தூய்மைப் படுத்துகிறதா?
4) தொடர்ந்து ஜகாத் வழங்குவது ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கிவிடுமா?
இது போன்ற சில விஷயங்களில் நம் சகோதரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம் புதிய கோணத்தில் மாறுபட்ட கருத்து தமிழகத்தில் மட்டும் ஒரு சிலரால் சமீப காலமாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
எனவே, ஜகாத்தின் சட்டங்களை உரிய சான்றுகளின் மூலம் தெளிவு படுத்த வேண்டிய அவசரமான அவசியம் ஏற்பட்டுள்ளது. இங்கு தரப்படும் தகவல், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். யாரின் சொந்தக் கருத்துக்கும் அறவே இடமளிக்க வில்லை. உண்மையை புரிந்து அதனை செயல்படுத்துபவர்களாகவும் தவறை இனம் கண்டு தவிர்ந்து நடப்பவர்களாகவும் நம்மை அல்லாஹ் ஆக்க வேண்டும்!
ஜகாத் என்றால் என்ன?
“ஜகாத்” என்ற வார்த்தைக்கு “வளர்ச்சி அடைதல்”, தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.
(والزكاة في اللغة النماء يقال زكا الزرع إذا نما وترد أيضاً في المال, وترد بمعنى التطهير. وشرعاً بالإعتبارين معاً: أما بالأول فلأن إخراجها سبب للنماء في المال, أو بمعنى أن الأجر بسببها يكثر, أو بمعنى أن متعلقها الأموال ذات النماء كالتجارة والزراعة. دليل الأول ((مانقص مال من صدقة)) ولأنها يضاعف ثوابها كما جاء ((إن الله يربي الصدقة)) وأما بالثانى فلأنها طهرة للنفس من رذيلة البخل, وتطهير من الذنوب. فتح الباري شرح صحيح البخاري ج3/332)
“ஜகாத்” என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.
பயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க “ஜகா அஜ்ஜரஉ” (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.
செல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் “ஜகா” எனும் வார்த்தை கையாளப்படுகிறது.
“தூய்மைப் படுத்துதல்” என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.
செல்வத்திலிருந்து குறிப்பிட்ட வகையினருக்கு வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்டளவு தொகையினை “ஜகாத்” என்று இஸ்லாம் பெயரிட்டிருப்பது இவ்விரு அர்த்தத்தின்படி மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், “ஜகாத்” வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடைய காரணமாக அமைகிறது. நன்மைகள் வளர காரணமாகிறது..
“தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது” (முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்) என்ற நபி மொழியும், “அல்லாஹ் தர்மங்களை வளர்க்கிறான்” என்று குர்ஆனில் வந்துள்ள செய்தியும் முறையே ஜகாத் வழங்குவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது, நன்மைகள் பன்மடங்காக கிடைக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்றன.
மேலும், ஜகாத் வழங்கும் மனிதன் கஞ்சத்தனம், பேராசை போன்ற இழிந்த துற்குணங்களின் கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்தப் படுகிறான். ஜகாத் வழங்குவதால் பல பாவங்களிலிருந்தும் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான்.
(ஃபத்ஹுல் பாரி: 3/332)
“ஜகாத்” என்ற வார்த்தைக்கு மேலே குறிப்பிட்ட இரு அர்த்தங்களும் உண்டு என்பதை லிசானுல் அரப், காமுஸுல் முஹீத், அந்நிஹாயா போன்ற எல்லா அகராதி நூற்களிலும், ஜகாத்தைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ் மற்றும் மார்க்கச் சட்ட விளக்க நூற்களிலும் கூறப்பட்டிருப்பதை காணலாம்.
இவ்வாறு பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தைக்கு “தூய்மைப்படுத்துதல்” என்ற அர்த்தம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே,
“ஜகாத்” என்ற வார்த்தைக்கு “வளர்ச்சியடைதல்”, “தூய்மைப் படுத்துதல்” போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் “ஜகாத்” இல்லை என்போர் யார்?
“ஜகாத்” வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என சிலர் சமீப காலமாக பிரச்சாரம் செய்து வரும் இவர்களின் ஆதாரங்களை ஆய்வு செய்யும் முன் இந்த கருத்துடையவர்கள் யாரெல்லாம் 14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்து வந்துள்ளனர் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
ஒரு முறை ஜகாத் வழங்கிவிட்ட எப்பொருளுக்கும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டியதில்லை என்ற கருத்தை நாம் மட்டும் கூறிக் கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்னர் பலரும் கூறியுள்ளனர் என இப்னுஹஸ்மின் “அல் முஹல்லா” எனும் நூலை மேற்கோள் காட்டி தங்களுக்கு வலுச்சேர்க்கின்றனர்.
இக்கருத்தை கூறியவர்கள் அன்றும் இன்றும் சிறுபான்மையோராகத்தான் இருந்தனர். எந்தக் காலத்திலும் இக்கருத்து எடுபடவில்லை. எனினும் நாம் கூறுவதில் சத்தியம் இருக்கிறது” எனக் கூறி வருகிறார்கள்.
இது சரிதானா?
இக்கருத்துடையவர்கள் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இவர்கள் மேற்கோள் காட்டிய நூலில் இதற்கு மாற்றமான கருத்தே பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என நாம் மட்டும் கூறவில்லை. எல்லாக்காலத்திலும் இக்கருத்துடையோர் சிறுபான்மையினராகவே இருந்து வந்தனர். இப்னு ஹஸ்ம் அவர்கள், முஹல்லா என்ற தனது நூலில் அவ்வாறு கூறியோரைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்”
இறைத்தூதர் மீதே பொய்யுரைத்தவர்கள், இப்னு ஹஸ்மின் மீது பொய்யுரைப்பதற்குத் தயங்குவார்களா என்ன? உண்மையில் இப்னு ஹஸ்ம், அப்படியொரு பட்டியல் எதையும் வெளியிடவில்லை என்பது மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நூலிலும் அவ்வாறு கூறப்படவில்லை. மாறாக, திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்பதில் யாரும் எந்தக் காலத்திலும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை என்றுதான் கூறியுள்ளார். அவர் கூறிய செய்தியை அவரது நூலிலிருந்து அப்படியே எடுத்துத் தருகிறோம்.
والزكاة تتكرر في كل سنة في الإبل, والبقر, والغنم, والذهب والفضة, بخلاف البر والشعير والتمر فإن هذه الأصناف إذا زكيت فلا زكاة فيها أبداً……..وهذا لا خلاف فيه من أحد…….. (المحلى:ج6/23)
“ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி ஆகியவற்றில் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கடமையாகும். தீட்டிய கோதுமை, தீட்டாத கோதுமை, பேரீச்சம் பழம் ஆகிய விளைபொருளில் ஒரு முறை ஜகாத் வழங்கி விட்டால் பின்பு அவற்றிற்கு எப்போதும் ஜகாத் இல்லை. மேற்கூறிய இக்கருத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.” (அல் முஹல்லா பாகம்: 6/23).
இப்னு ஹஸ்ம் காலம் வரையிலும் மாற்றுக் கருத்துடையோர் யாரும் இருந்ததில்லை. அவர் காலத்திற்குப் பிறகும் அவ்வாறு கூறுவோர் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே உண்மை.
திரித்துக் கூறப்பட்ட இப்னு ஹஸ்மின் கூற்று
“மேய்ந்து திரியாத கால்நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டுக்கு மட்டும் ஒரு தடவை ஜகாத் வழங்கி விட்டால், அதற்கு ஜகாத் இல்லை” எனக் கூறும் சிலருக்கு அதனை மறுக்கும் விதமாக இப்னு ஹஸ்ம் பின்வரும் கேள்விக் கணையையும் அவர்களை நோக்கி வீசுகிறார்.
இப்னு ஹஸ்மின் கேள்விக்கணை!
قال أبو محمد( إبن حزم)… قد ثبت أن رسول الله كان يبعث المصدقين في كل عام لزكاة الإبل, والبقر, والغنم. هذا أمر منقول نقل الكافة. . فخروج المصدقين في كل عام موجب أخذ الزكاة في كل عام بيقين. فإذا لاشك في ذلك, فتخصيص بعض ما وجبت فيه الزكاة عاماً بأن لايأخذ المصدق الزكاة عاماً ثانياً تخصيص النص, وقول بلا برهان. (المحلى ج6/28ص)
“ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜகாத் வசூலிப்போரை, ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைப்பது (கடந்த காலங்களில் ஜகாத் வழங்கப்பட்டது உட்பட அனைத்துப் பொருட்களிலும்) ஜகாத் வசூலிப்பது கடமை என்பதையே தெளிவு படுத்துகிறது. இந்நிலையில், முதல் ஆண்டில் ஜகாத் வாங்கியவற்றில் அடுத்த ஆண்டு ஜகாத் வாங்குதல் இல்லை என்பது சான்றில்லாத கூற்றாகும். (இக்கூற்றினை ஏற்க இயலாது.) (அல்முஹல்லா பாகம்:6 பக்கம்:28)
ஒவ்வொரு வருடமும் ஜகாத் வசூலிப்போரை நபி (ஸல்) அனுப்பி வைக்கும் போது, கடந்த ஆண்டு ஜகாத் வாங்கி விட்டதற்கு திரும்ப ஜகாத் வாங்காதீர்கள் எனக் கூறி அனுப்பியதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே ஒவ்வொரு வருடமும் ஏற்கனவே ஜகாத் வழங்கப்பட்டது, வழங்கப்படாதது எனப் பாகுபாடில்லாமல் எல்லாவற்றுக்கும் ஜகாத் வசூலிக்கப்பட்டுள்ளது என்றே நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக யாராவது கூறினால் அதற்கான சான்றினைச் சமர்ப்பிக்க வேண்டும் என இப்னு ஹஸ்ம் கேட்பது அவர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ, நமக்கு நன்றாகவே கேட்கிறது.
தீனி போட்டு வளர்க்கப்படும் கால் நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டு பொருள்களுக்கு மட்டும் ஆயுளில் ஒரு தடவை ஜகாத் வழங்கினால் போதும் என்ற இந்தச் செய்தியைத்தான் திரித்து ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு திரும்ப ஜகாத் இல்லை என்று கூறுவோர் எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர் என பேசி வருகின்றனர். இவர்கள் கூறுவது போல் அந்நூலில் இருந்தால் அதன் அரபி வாசகத்துடன் எழுதி வெளியிடத் தயாரா?
14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் எந்த அறிஞருக்கும் உதிக்காத புதிய ஞானம் இந்த நவீன அறிஞர்களுக்கு தோன்றியது ஒரு விந்தைதான். “இக்கருத்து எந்தக் காலத்திலும் எடுபடவில்லை, புறக்கணிக்கப்பட்டு விட்டது” என்று அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். சத்தியத்திற்கு புறம்பான கருத்துகள் எக்காலத்திலும் எடுபடாது என்பது உலகறிந்த விஷயம்தானே. அசத்தியம் அழிந்தே தீரும் என்பது இறைவாக்கல்லவா?
எனினும், தங்களின் கருத்துக்கள் உண்மையானது போல பேசிவருகிறார்கள். முதலில் இவர்கள் என்ன கூறுகிறார்கள், தங்களின் கருத்தை நிலை நிறுத்த எடுத்து வைக்கும் சான்றுகள்தான்(?) என்ன என்பதை அறிந்து விட்டு, பின்பு அதற்கான பதில் என்ன? என்பதை தெரிந்துக் கொண்டு, பிறருக்கும் புரியவைப்போம். சத்தியத்தை நம் அனைவருக்கும் புரிய வைத்து அதனைப் பின்பற்றி நடப்பவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!
ஜகாத் இல்லை என்போர் காட்டும் சான்றுகள்(?)
1. “செல்வத்தை தூய்மைப்படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என நபி(ஸல்)அவர்கள் கூறி உள்ளார்கள். (துஹ்ரத்தன் லில் அம்வால்) எனவே, ஒருமுறை ஜகாத் வழங்கி விட்டால் பொருளாதாரம் சுத்தமாகி விடுகிறது. சுத்தமாகி விட்ட ஒரு பொருளை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
(மீண்டும் ஜகாத் இல்லை என்போர் தங்களது வாதத்திற்கு இதனை வலுவான முதன்மைச் சான்றாக கருதி வந்தார்கள். இதை இறைத்தூதர் கூறவில்லை என்பதை நாம் நிரூபித்துக் காட்டியதன் பின், துணை ஆதாரமாகத்தான் கூறினோம் என்பதால் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டனர். இவர்களின் கருத்துப்படி இதனை துணை ஆதாரமாகவும் கருதமுடியாது. ஏனெனில் இறைத்தூதர் கூறாத எதையும் முதன்மை ஆதாரமாகவும் துணை ஆதாரமாகவும், காட்டலாகாது என்பதே இவர்களின் கொள்கை.)
2. “ஜகாத் கொடுங்கள்” என அல்லாஹ் கூறுகிறான். “கொடு” என்று சொன்னால் எல்லா மொழியிலும் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் புரிந்து கொள்கிறோம். அது போன்றே “ஜகாத் கொடு” என்ற வசனத்தையும் ஒரு முறை ஜகாத் கொடு என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
3. ஹஜ்ஜைப் போன்றே ஜகாத்தும் ஆயுளில் ஒரு முறைதான்.
4. விளைபொருளில் அறுவடை செய்யும் அன்று ஜகாத் கொடுத்து விட்டால் அதன் பின் அதற்கு எப்போதும் ஜகாத் வழங்க வேண்டாம் என எல்லோரும் கூறுகின்றனர். அதுபோல்தான் மற்ற பொருளாதாரத்திலும் ஒரு முறைதான் ஜகாத் எனப் புரிந்து கொள்ள வேண்டும். விளைபொருளுக்கு ஒரு சட்டம், தங்கம், வெள்ளி போன்ற பொருளாதாரத்திற்கு மற்றொரு சட்டமா?
5. கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்கிக் கொண்டிருந்தால் விரைவில் வறுமை ஏற்பட்டு ஜகாத் கொடுத்தவன் பிறரிடம் கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு பிச்சைக்காரனாக ஆகிவிடுவான். ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கும் சட்டத்தை இஸ்லாம் ஒரு போதும் கூறாது.
6. அனைவரும் செய்யும்படி சட்டத்தை எளிமையாக கூறினால் அனைவரும் செயல்படுத்துவார்கள். மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என சட்டத்தைக் கடினமாக சொல்வதனால்தான் ஆயிரத்தில் ஒருவர் கூட சரியாக ஜகாத் வழங்குவதில்லை. ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என சட்டம் கூறினால் ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் ஜகாத் வழங்கி விடுவார்கள்(!?).
7. “ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும்” என குர்ஆனிலோ நபிமொழி யிலோ ஒர் இடத்தில் கூட கூறப்படவில்லை.
ஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறி வருவோர் தங்களது கருத்திற்கு எடுத்துக் காட்டும் சான்றுகள்தான் இவை.
(சமீத்தில் வெளியான ஏகத்துவத்திலும், (செப்டம்பர் 2005), ஜகாத் குறித்து பல இடங்களில் பேசியவற்றை தொகுத்து வழங்கப்பட்ட “ஜாகத் ஓர் ஆய்வு” என்ற சி.டி. யிலும் இச்சான்றுகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளததைக் காணலாம்.)
சான்றாய்வு- 1
ஜகாத் பொருளைத் தூய்மைப்படுத்துகின்றதா?
“பொருளாதாரத்தை தூய்மைப் படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்” என இறைத்தூதர் கூறியதாக மேடைகளில் பேசிவரும் இவர்கள், எந்த நூலில், யார் அறிவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை ஒர் இடத்திலும் அறவே குறிப்பிடவில்லை. பொதுவாக மார்க்க அறிஞர் ஒரு நபிமொழியை கூறுவதாக இருந்தால், அறிவிப்பாளர் தொடரோடு எந்த நூலில் இடம் பெற்றுள்ளது என்பதை மேற்கோள் காட்டித்தான் பேச வேண்டும். அவ்வாறு கூறாததால் நாமே இந்த நபிமொழியை சரிகாண ஆய்வில் இறங்கினோம்.
இச்செய்தி, புகாரியில் 1404, 4661 இடங்களில், பதிவாகி இருப்பது உண்மைதான். ஆனால், அதை இறைத்தூதர் கூறவில்லை. மாறாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்தான் கூறியுள்ளார்.
இதோ அந்த செய்தி!
1404-عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ-رضى الله عنهما – فَقَالَ أَعْرَابِىٌّ أَخْبِرْنِى قَوْلَ اللَّهِ (وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِى سَبِيلِ اللَّهِ ) قَالَ ابْنُ عُمَرَ – رضى الله عنهما – مَنْ كَنَزَهَا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا فَوَيْلٌ لَهُ ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْراً لِلأَمْوَالِ (رواه البخاري)
காலித் பின் அஸ்லம் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, “யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ..” என்ற வசனத்தைப் பற்றி வினவினார். இப்னு உமர்(ரலி), “யார் அவற்றைப் பதுக்கிவைத்து அதற்கான ஜகாத்தை கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஜகாத் கடமையாகுவதற்கு முன்புள்ளதாகும். ஜகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் தூய்மைப்படுத்தக் கூடியதாக “ஜகாத்தை” அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்றனர். (புகாரி: 1404, 4661)
இச்செய்தி இப்னு மாஜாவிலும், 7021 வது நபி மொழியாக பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இச்செய்தி நாம் அறிந்தவரை இறைத்தூதர் கூறியதாக உலகில் உள்ள எந்நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. இது இறைத்தூதர் மீது இட்டுக் கட்டப்பட்ட மாபெரும் பொய்யாகும்.
நபித் தோழரின் கூற்றை ஏற்க மறுப்பது ஏன்?
இப்னு உமர் கூறிய செய்தி நம்பகத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏன் மறுக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம்.
ஆனால், எந்த ஒரு விஷயத்திற்கும் நபித் தோழர்களின் கூற்றை சான்றாக ஏற்காதவர்கள் இக்கேள்வியை எழுப்ப அறவே அருகதையற்றவர்கள்.
ஜகாத் மனிதனைத்தான் தூய்மைப்படுத்துகிறது என குர்ஆனிலும் நபிமொழியிலும் தெளிவாகக் கூறப்பட்டு விட்டதால், இப்னு உமர் அவர்களின் கூற்றை சான்றாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்பதற்கு இப்னு உமரின் கூற்றை சான்றாக எடுத்துக் கொண்டவர்கள், அதே இப்னு உமர் (ரலி) அவர்கள், ஜகாத் வழங்கிய பொருளுக்கே மீண்டும் ஜகாத் வழங்கி வந்துள்ளார்கள் என்ற நடைமுறையை மறந்து விட்டார்களா? அல்லது மறைத்து விட்டார்களா? என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.
இச்செய்தியை கூறிய இப்னு உமர் அவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத ஒரு செய்தியை இவர்கள் மட்டும் அறிந்து கொண்டார்கள் என்றால் அதுதான் ஒரு வியப்பான மர்மம்.
செல்வத்தைத் தூய்மைப் படுத்துவதாக நபி மொழியில் இடம் பெற்றுள்ளதா?
“ஜகாத் செல்வத்தை தூய்மைப் படுத்துகிறது” என்ற தங்களின் கருத்துக்கு அபூ தாவூதில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸை கூடுதல் சான்றாக முன் வைக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் சான்றாக காட்டிய இந்நபி மொழியில் “துஹ்ரத்தன் லில் அம்வால்” (செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது) என்ற (அர்த்தத்தைக்கொண்ட) வார்த்தை அறவே இடம் பெறவில்லை. அதற்கு நிகரான “தஹ்ஹாரத்தன்”, “முதஹ்ஹிரத்தன்” “யுதஹ்ஹிர” “தஹ்ஹர”, “துஹுரன்” போன்ற வார்த்தைகளும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
முதலில் அவர்கள் சமர்ப்பித்த நபி மொழியை அதன் அர்த்தத்துடன் காண்போம்.
حدثنا عثمان بن أبي شيبة حدثنا يحيى بن يعلى المحاربي حدثنا أبي حدثنا غيلان عن جعفر بن إياس عن مجاهد عن ابن عباس قال لما نزلت هذه الآية والذين يكنزون الذهب والفضة قال كبر ذلك على المسلمين فقال عمر رضي الله عنه أنا أفرج عنكم فانطلق فقال يا نبي الله إنه كبر على أصحابك هذه الآية فقال رسول الله إن الله لم يفرض الزكاة إلا ليطيب ما بقي من أموالكم وإنما فرض المواريث لتكون لمن بعدكم فكبر عمر ثم قال له ألا أخبرك بخير ما يكنز المرء المرأة الصالحة إذا نظر إليها سرته وإذا أمرها أطاعته وإذا غاب عنها حفظته – ابوداود
“பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்து” என்ற வசனம் அருளப்பட்டது நபித்தோழர்களுக்கு பெரும் பாரமாக தெரிந்தது. உங்களது கவலையை நான் நீக்குகிறேன்” என்று கூறி விட்டு, இறைத்தூதரை நோக்கிச் சென்ற உமர்(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவ்வசனம் உங்களின் தோழர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “உங்களின் செல்வத்தில் எஞ்சியதை (சேமிப்பதை) அனுமதிப்பதற்காகவே தவிர வேறு எதற்கும் ஜகாத்தை அல்லாஹ் கடமையாக்கவில்லை. உங்களுக்குப் பின் வருவோருக்கு செல்வம் சேர வேண்டும் என்பதற்காகத்தான் வாரிசுரிமைச் சட்டத்தைக் கடமையாக்கினான்” என கூறினார்கள். இதை செவியுற்ற உமர்(ரலி) தக்பீர் முழங்கிய போது, “மனிதன் சேமிப்பதில் சிறந்தது” எது என உங்களுக்கு அறிவிக்கட்டுமா? “கணவன் காணும்போது மகிழ்விக்கும், அவனது கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும், அவளை விட்டும் அவன் வெளியில் சென்று விட்டால் அவனை (அவனது உடமையை) பாதுகாக்கும் நல்ல மனைவிதான் சிறந்த சேமிப்பாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்).
இந்நபி மொழியில் இடம் பெற்ற “லி யுதய்யப” என்ற வார்த்தைக்கு தூய்மைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், ஜகாத் வழங்குவது செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது என இறைத்தூதரே கூறிவிட்டதாக தங்களின் கருத்திற்குச் சான்றாக இந்நபி மொழியை முன்வைக்கிறார்கள்.
அறிவிப்பாளர் விடுபட்ட தொடர்பறுந்த பலவீனமான ஹதீஸாகும்
ஆனால், இந்நபி மொழி அறிவிப்பாளர் தொடர்பறுந்த பலவீனமான ஹதீஸாகும். காரணம், நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் “உஸ்மான்” என்ற அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். அவர் பலவீனமானவர் என்பது இக்கலை அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவாகும்.
மேலும், முஜாஹித் என்பவரிடமிருந்து ஜாஃபர் பின் இயாஸ் அறிவிப்பதாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாஃபர் நம்பகமானவர், புஹாரி முஸ்லிம் ஆகிய நூட்களில் இடம் பெற்றவர்தான் என்றாலும், முஜாஹித்தின் மூலம் அவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானதாகும் என்று அவரது மாணவரும், அறிவிப்பாளர் ஆய்வில் சிறந்து விளங்குபவருமான ஷுஃபா அவர்கள் கூறியதை, யஹ்யா பின் முயீன், யஹ்யா பின் சயீத், அஹ்மத் பின் ஹன்பல், இப்னு ஹஜர் ஆகியோர் சந்தேகத்திற்கு இடமின்றி உறுப்படுத்தியுள்ளனர்.
எனவே, இவ்விரு காரணங்களின் அடிப்படையில், அபூ தாவூதில் இடம் பெற்றுள்ள இந்நபி மொழி பலவீனம் என்பதால், அவர்களின் கருத்துக்கு இது சான்றாக அமையாது.
பொருளைத் தூய்மைப் படுத்துவதே ஜகாத் என்ற நபிமொழி பலவீனம் என்பதற்கான சான்றுகள் அரபி மூலத்துடன்:
அபூ தாவூதில் இடம் பெற்றுள்ள இந்நபி மொழியை மேலோட்டமாக பார்க்கும் போது ஸஹீஹானது போல தோன்றும். ஏனெனில் இதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களில் பெரும்பாலோர் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றவர்கள். குறிப்பாக அறிவிப்பாளர் வரிசையில் உள்ள கைலான் என்பவரும், ஜாஃபர் என்பவரும் சம காலத்தில், அடுத்தடுத்த ஊரில் வாழ்ந்து வந்தவர்கள். இவ்விருவரும் சந்தித்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு போன்ற செய்திகளை மேலோட்டமாக பார்த்து விட்டு ஹாகிம், ஹாஃபிழ் அல்இராகி ஆகியோர் இது ஸஹீஹானது என கூறிவிட்டனர். அறிவிப்பாளர் ஒருவர் விடுபட்ட தொடர்பறுந்த நபிமொழி என்பது ஊர்ஜிதமாகவில்லையானால், இவர்கள் கூறியது சரி என ஏற்கலாம். ஆனால், ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார், அவர் பலவீனமானவர் என்பது சான்றுகளுடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஸஹீஹ் என வாதிப்பவர்கள் அதற்கான பதிலைத் தராத வரையிலும் பலவீனம் என்ற கருத்தே உறுதியாகும்.
அறிவிப்பாளர் விடுபட்டதை அறிந்து கொள்வது எப்படி?
அறிவிப்பாளர் விடுபட்ட செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள இந்நபி மொழி எந்தெந்த நூற்களில் இடம் பெற்றுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.
ஹாகிமில் இரு இடங்களில்:
1487 أخبرنا أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا علي بن عبد الله بن المديني ثنا يحيى بن يعلى المحاربي ثنا أبي حدثنا غيلان بن جامع عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس رضي الله عنهما ………
3281 أخبرنا علي بن محمد بن عقبة الشيباني حدثنا إبراهيم بن إسحاق الزهري حدثنا يحيى بن يعلى بن الحارث المحاربي حدثنا أبي حدثنا غيلان بن جامع عن عثمان بن القطان الخزاعي عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس رضي الله عنهما
ஸுனன் பைஹகி:
سنن البيهقي الكبرى ج: 4 ص: 83
7027 أخبرنا أبو محمد عبد الله بن يحيى بن عبد الجبار السكري ببغداد أنبأ إسماعيل بن محمد الصفار ثنا عباس بن عبد الله الترقفي ثنا يحيى بن يعلى بن الحارث ثنا أبي ثنا غيلان يعني بن جامع عن عثمان أبي اليقظان عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس……
7028 وأخبرنا أبو عبد الله الحافظ ثنا علي بن محمد بن عقبة الشيباني بالكوفة أنبأ إبراهيم بن إسحاق الزهري ثنا يحيى بن يعلى بن الحارث المحاربي فذكره ثم بمثل إسناده وقصر به بعض الرواة عن يحيى فلم يذكر في إسناده عثمان أبا اليقظان
முஸ்னத் அபீ யஃலா:
مسند أبي يعلى ج: 4 ص: 378
2499 حدثنا أبو بكر حدثنا يحيى بن يعلى قال حدثني أبي حدثنا غيلان عن عثمان أبي اليقظان عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس….
ஷுஃபல் ஈமான்:
شعب الإيمان ج: 3 ص: 194
3307 أخبرنا ابو عبد الله الحافظ أنا أبوعلي محمد بن عقبة الشيباني وبالكوفة نا ابراهيم بن اسحاق الزهري نا يحيى بن يعلى بن الحارث المحاربي نا ابي نا غيلان بن جامع عن عثمان ابي اليقظان الخزاعي عن جعفر بن أياس عن مجاهد …..
فضائل الصحابة لابن حنبل ج: 1 ص: 374 560 حدثنا محمد بن يونس قال نا يحيى بن يعلى قال أبي نا غيلان بن جامع عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس
தஃப்ஸீர் இப்னு கஃதீர்:
تفسير إبن كثير
قال ابن أبي حاتم: حدثنا أبي حدثنا حميد بن مالك حدثنا يحيى بن يعلى المحاربي حدثنا أبي حدثنا غيلان بن جامع المحاربي عن عثمان بن أبي اليقظان عن جعفر بن إياس عن مجاهد عن ابن عباس……..
மேற்கண்ட நூற்களில் இடம் பெற்ற அறிவிப்பாளர்கள் வரிசையில் கோடிட்ட இடங்களை நன்கு கவனித்து பார்ப்பவர்கள், ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பதை எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்வார்கள். அதாவது கைலான் மற்றும் ஜாஃபர் ஆகிய இருவருக்குமிடையில் உஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர்தான் அபூ தாவூதின் அறிவிப்பில் விடுபட்டுள்ளார்.
விடுபட்டுள்ளார் என்பது சரியா? நுழைக்கப்பட்டார் என்பது சரியா?
இந்நபிமொழி யஹ்யா என்பவரின் மூலம்தான் அபூ தாவூத் உட்பட எல்லா நூற்களிலும் பதிவாகி உள்ளது. யஹ்யாவைத் தவிர வேறுயாரும் இச்செய்தியை அறிவிக்கவும் இல்லை. யஹ்யாவிடமிருந்து அவரின் ஏழு மாணவர்கள் இதனை அறிவிக்கிறார்கள்.
1. உஸ்மான் பின் அபீ ஷைபா. (அபூ தாவூத்)
2. அலி பின் அப்தில்லாஹ் அல் மதீனியி. (ஹாகிம்)
3. முஹம்மது பின் யூனுஸ். (ஃபழாயிலுஸ் ஸஹாபா)
4. இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அஜ்ஜுஹ்ரி. (ஹாகிம், பைஹகி, ஷுஃபல் ஈமான்)
5. அப்பாஸ் பின் அப்தில்லாஹ் அத்தர்ஃபகியி. (பைஹகி)
6. ஹமீது பின் மாலிக். (இப்னு கதீர்)
7. அபூ பக்கர். (அபீ யஃலா)
யஹ்யாவின் மூலம் அறிவிக்கும் அவரது ஏழு மாணவர்களில் முதல் மூவரின் அறிவிப்பில் ‘உஸ்மான்’ இடம் பெறவில்லை. அடுத்துள்ள நால்வரின் அறிவிப்பிலும் ‘உஸ்மான்’ இடம் பெறுகிறார். இவர்களின் அறிவிப்புகளில் எது சரியானது?
முந்திய மூவரின் அறிவிப்பில் உஸ்மான் விடுபட்டுள்ளார் என்பது சரியா? அல்லது மற்றுள்ள நால்வரின் அறிவிப்பில் உஸ்மான் நுழைக்கப்பட்டுள்ளார் என்பது சரியா? இதற்கான சரியான விடையை நாம் தெரிந்து கொண்டால், இந்த நபிமொழியில் ஏற்பட்ட குழப்பம் நீங்கிவிடும்.
விடுபட்டுள்ளார் என்பதே சரியானது
‘இந்நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையில் உஸ்மான் என்பவரை சிலர் விட்டுட்டு சுருக்கமாக அறிவிக்கிறார்கள்’ என ஹதீஸ் மற்றும் அறிவிப்பாளர்கள் ஆய்வில் சிறந்து விளங்குபவரும், இந்த ஹதீஸை தனது நூலில் பதிவு செய்தவருமான மாபெரும் இமாம் பைஹகி அவர்கள் இந்த ஹதீஸின் கீழ் தெளிவான குறிப்புரை ஒன்றை எழுதியுள்ளார். இமாம் பைஹகியின் இந்த விளக்கம், முதல் மூவரின் அறிவிப்பிலும் உஸ்மான் விடுபட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதோடு, ‘நுழைக்கப்பட்டார்’ என்ற கருத்து தவறானது என்பதையும் உணர்த்துகிறது.
அறிவிப்பளார் விடுபட்டுள்ளார் என்பதை அழ்ழியாவுல் மக்தஸி என்பரும் தனது நூலில் உறுதிப் படுத்தி உள்ளார்.
இந்நபி மொழியை தனது நூலில் பதிவு செய்த இமாம் பைஹகி அவர்கள், உஸ்மான் விடுபட்டுள்ளார் என்பதை உறுதி செய்யும் போது, மாற்றுக் கருத்துடையோர் தவறான கருத்து கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
‘சமகாலத்தில் அடுத்தடுத்த ஊரில் வாழ்ந்துள்ள ஜாஃபர் மற்றும், கைலான் இருவரும் சந்தித்துக் கொள்ள அதிக வாய்ப்பிருப்பதால், அதுவே இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்பதற்கு போதுமான சான்றாகும். ஹாகிமில் இடம் பெற்ற பலவீனமான அறிவிப்பின் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூ தாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும்’ என்று கூறி அபூ தாவூத்தில் இடம் பெற்ற ஹதீஸை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
இவ்வாறு கூறுவதுதான் அர்த்தமற்றதாகும். சமகாலத்தில் வாழ்ந்த இருவர் சந்தித்திருக்க சாத்தியம் இருப்பது போலவே, சந்தித்துக் கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ‘இருவருக்கும் சந்திப்பு இல்லை.’ என்பதை இந்த நபி மொழியைப் பதிவு செய்துள்ள மாபெரும் இமாம் பைஹகி அவர்களால் உறுதி செய்யப்பட்ட நிலையில், ‘சந்திப்பு உண்டு’ என்போர் தமது கருத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க போதுமான சான்றுகள் தரவேண்டும். மேலும், ஜாஃபர் என்பவரின் மாணவர் உஸ்மான், இவரின் மாணவர்தான் கைலான் என்பதை தஹ்தீபுல் கமால் என்ற நூலின் ஆசிரியர் உறுதிப்படுத்துகிறார். இவ்வரலாற்றுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போதும், கைலான் என்பவர் உஸ்மானிடம் இருந்துதான் இந்த செய்தியை அறிவித்துள்ளார், ஜஃபரிடம் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பது மேலும் உறுதியாகின்றது.
சமகாலத்தில் வாழ்ந்த இருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் சாத்தியம் இருப்பதால்தான் இமாம் புஹாரி அவர்கள் இந்த நிபந்தனையை ஏற்கவில்லை. மாறாக இருவரும் ஒரு முறையாவது சந்தித்துள்ளார்கள் என்பது நிரூபணமாகி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
மேலும், இந்த அறிவிப்பில் உள்ள கோளாறு, கைலான் என்பவரின் மூலம் ஏற்படவில்லை. மாறாக யஹ்யாவின் மாணவர்களின் மூலம் தான் ஏற்பட்டுள்ளது. அதாவது, கைலான் என்பவர் ‘ஜாஃபர்’ என்று கூறினாரா? அல்லது ‘உஸ்மான்’ என்று கூறினாரா? என்பதுதான் இங்கே ஏற்பட்ட குழப்பம். இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த, யஹ்யா அல்லாத வேறொருவரின் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருந்து, அத்தொடரில் ‘உஸ்மான்’ இடம் பெறாமல், ஜாஃபரிடமிருந்து கைலான் நேரிடையாக கேட்டுள்ளார் என்பதை சுட்டிக் காட்டி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால், அப்போது அபூ தாவூதின் அறிவிப்பில் எந்த ஒரு அறிவிப்பாளர் விடுபடவில்லை என்பதை ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்காத வரை அபூ தாவூதின் அறிவிப்பில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்ற நம் கருத்து உறுதியானதாகும்.
பைஹகி அவர்கள் தெரிந்து கொண்ட இந்நுட்பமான காரணம் இந்த ஹதீஸை சரியென கூறியவர்களின் கவனத்திற்கு வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதனால், அபூ தாவூதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை மட்டும் பார்த்தவர்கள் அதனை ஸஹீஹ் என மேலோட்டமாக கூறிவிட்டனர்.
ஒரு ஹதீஸில் இடம் பெற்ற பலவீனமான அறிவிப்பாளரை நீக்கி விட்டு அறிவித்தால் அது ஸஹீஹான ஹதீஸாக மாறிவிடுமா?
உஸ்மான் பற்றிய விமர்சனங்கள்:
உஸ்மான் பின் உமைர் அபில் யக்ழான் அல் பஜலி, அல் கூஃபி என்பதே முழுப் பெயராகும்.
அல் மஜ்ரூஹீன் என்ற நூலில்:
‘தான் அறிவிப்பது என்ன?’ என அறியாமல் குழப்பம் அடைந்தவர்களில் ‘உஸ்மான்’ என்பவரும் ஒருவர். ஒரு நபி மொழியை மற்றொன்றோடு கலந்து, மாற்றி மாற்றி அறிவிப்பதால், இவர் அறிவிக்கும் எதையும் ஆதாரமாக ஏற்ககூடாது.
யஹ்யா பின் முயீன், அப்துர்ரஹ்மான் அல்மஹ்தி ஆகியோர் இவரின் மூலம் எந்த ஒரு செய்தியையும் அறிவிக்க மாட்டார்கள்.
ஷுஃபா என்பவர் கூறுகிறார்:
‘நான் ஒரு முறை உஸ்மானிடம் வந்தேன். ஒரு செய்தியை மற்றொன்றோடு மாற்றி கலந்து அறிவிப்பதைக் கண்டேன். அதனால், எதையும் எழுதிக் கொள்ளாமல் திரும்பி விட்டேன்.’
தக்ரீப் தஹ்தீப் எனும் நூலில்:
…அவர் பலவீனமானவர், குழப்பம் அடைந்தவர், ஷியாக் கொள்கையில் மூழ்கிப்போனவர், அவர் ஒரு முதல்லிஸாகும். (ஹதீஸை கேட்காத ஒருவரிடமிருந்து கேட்டது போல் அறிவிப்பவர்.)
‘பலவீனமானவர்’ (தார குத்னி)
இமாம் புகாரி அவர்கள்:
மறுக்கப்படும் ஹதீஸை அறிவிப்பவர்
அறிவிப்பாளர் வரிசையில் உள்ள மற்றொரு கோளாறு
இதன் அறிவிப்பாளர் வரிசையில் மற்றொரு கோளாறும் உண்டு. அதாவது, ஜாஃபர் பின் இயாஸ் என்பவர் முஜாஹித்தின் மூலம் இதனை அறிவிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாஃபர் பின் இயாஸ் நம்பகமானவர், குறிப்பாக சயீத் பின் ஜுபைர் மூலம் அறிவிப்பவர்களில் மிக உறுதியானவர் என்பதில் எச்சந்தேகமும் இல்லை. எனினும், முஜாஹித் மூலம் அவர் அறிவிக்கும் செய்தி பலவீனமானதாகும். ஏனெனில், “ஜாஃபர் என்பவர் முஜாஹித் மற்றும் ஹபீப் பின் ஸாலிம் மூலம் அறிவிக்கும் செய்தி பலவீனமானதாகும். அவ்விருவரிடம் எதையும் கேட்கவில்லை” என (அறிவிப்பாளர்கள் ஆய்வில் சிறந்து விளங்கும்) ஷுஃபா அவர்கள் கூறியதாக யஹ்யா பின் சயீத் அறிவித்த செய்தியை, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் உறுதி செய்கிறார்.
“முஜாஹித்திடம் தஃப்ஸீர் குறித்த எச்செய்தியையும் ஜாஃபர் கேட்கவில்லை” என இமாம் ஷுஃபா கூறி யதாக யஹ்யா பின் முயீன் கூறுகிறார். (அபூதாவுதில் இடம் பெற்ற செய்தி தஃப்ஸீர் குறித்ததாகும் என்பது இங்கே கவனிக்கத் தக்கது.)
முஜாஹிதின் மூலம் ஜாஃபர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனம் என்ற காரணத்தினால்தான் இமாம் முஸ்லிம் அவர்கள் தனது நூலில், ஒரு செய்தியைக் கூட பதிவு செய்யவில்லை என இப்னு ஹஜ்ர் அவர்கள் ஃபத்ஹுல் பாரியின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். (இமாம் புகாரி அவர்களும் இவரை குறை கூறியுள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)
முஜாஹித்திடம் கேட்கவில்லை என்ற இமாம் ஷுஃபா அவர்களின் கருத்தை யஹ்யா பின் சயீத், யஹ்யா பின் முயீன், அஹ்மத் பின் ஹன்பல், இப்னு ஹஜர் இன்னும் பல அறிஞர்களும் உறுதிபடுத்துகின்றனர். (தஹ்தீபுத் தஹ்தீப், தஹதீபுல் கமால், அல்ஜர்ஹ் வத் தஃதீல், அல்காமில் ஃபில் ளுஃபா, மிஜானுல் இஃதிதால், அல் முக்னீ, அல் மராஸீல் ஆகிய நூற்களிலும், ஃபத்ஹுல் பாரியின் முன்னுரையிலும் இதனைக் காணலாம்.)
ஷுஃபாவின் ஆசிரியர்தான் ஜாஃபர் என்பவர். ஒரு மாணவர் தன் ஆசிரியரைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார் என்ற அடிப்படையிலும், நிறையை விட குறையை முற்படுத்த வேண்டும் என்ற அடிப்படை யிலும், ஷுஃபா கூறியதை புறக்கணிக்க முடியாது.
இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, முஜாஹித் அவர்களிடம் ஜாஃபர் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாகிறது. எனவே, முஜாஹித் மூலம் ஜாஃபர் அறிவிப்பதாக அபூ தாவூதில் பதிவான நபி மொழி பலவீனம் என்ற வாதம் மேலும் வலுப்பெறுகிறது.
ஆக, இந்நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையில் உஸ்மான் என்ற பலவீனமானவர் விடுபட்டுள்ளதாலும், முஜாஹித் மூலம் ஜாஃபர் அறிவிப்பது பலவீனமாகும் என்ற காரணத்தினாலும் அபூ தாவூதில் இடம் பெற்ற நபிமொழி பலவீனமானதாகும். பல்வேறு வகையில் பலவீனமாகவும், அர்த்தத்திலும் தங்களது கருத்திற்கு மாற்றமாக இருக்கும் இந்த ஹதீஸைத்தான் இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையான ஜகாத்தைப் பற்றி தீர்மானிக்க சான்றாக இவர்கள் கூறிவருகிறார்கள்.
ஜாஃபர் பின் இயாஸ் பற்றிய சில நூற்களில் இடம் பெற்ற விமர்சனங்களின் அரபு மூலம் கீழே தரப்பட்டுள்ளது.
[930] جعفر بن إياس أبو بشر بن أبي وحشية بفتح الواو وسكون المهملة وكسر المعجمة وتثقيل التحتانية ثقة من أثبت الناس في سعيد بن جبير وضعفه شعبة في حبيب بن سالم وفي مجاهد من الخامسة مات سنة خمس وقيل ست وعشرين ع تقريب التهذيب ج1/ص139
1491 2524ت جعفر بن إياس ع أبو بشر الواسطي أحد الثقات أورده ابن عدي في كامله فأساء وهو بصري سكن واسط وحدث عن سعيد بن جبير ومجاهد وطبقتهما وكان من كبار العلماء معدود في التابعين فإنه روى عن عباد بن شرحبيل اليشكري أحد الصحابة حديثا في السنن سمعه وعنه شعبة وهشيم وجماعة وكان شعبة يضعف أحاديث أبي بشر عن حبيب بن سالم وقال أحمد أبو بشر أحب إلينا من المنهال بن عمرو وقال أبو حاتم وغيره ثقة وقال ابن القطان كان شعبة يضعف حديث أبي بشر عن مجاهد وقال لم يسمع منه شيئا وقال أبو طالب سألت أحمد عن حديث لشعبة عن أبي بشر سمع مجاهدا يحدث عن ابن عمر مرفوعا في التحيات فأنكره فقلت يرويه نصر بن علي الجهضمي عن أبيه عنه وقال الأثرم حدثنا أحمد حدثنا يحيى كان شعبة يضعف حديث أبي بشر عن مجاهد في الطير هو حديث للمنهال عن سعيد بن جبير عن ابن عمر قال ابن عدي وأبو بشر له غرائب وأرجو أنه لا بأس به (ميزان الإعتدال)
جعفر بن إياس أبو بشر بن أبي وحشية مشهور بكنيته من صغار التابعين وثقه بن معين والعجلي وأبو زرعة وأبو حاتم والنسائي وكان شعبة يقول إنه لم يسمع من مجاهد ولا من حبيب بن سالم وقال أحمد كان شعبة يضعف أحاديثه عن حبيب بن سالم وقال البرديجي هو من أثبت الناس في سعيد بن جبير وقال بن عدي أرجو أنه لا بأس به فتح الباري
7331 أبو بشر هو جعفر بن أبي وحشية ثقة ضعف (كتاب المغني للإمام الذهبي)
39 جعفر بن أبي وحشية أبو بشر
حدثنا محمد بن حمويه بن الحسن قال سمعت أبا طالب قال قال أحمد بن حنبل قال يحيى بن سعيد كان شعبة يضعف حديث أبي بشر عن مجاهد قال ما سمع منه شيئا ( المراسيل لابن أبي حاتم)
இந்நபிமொழி அவர்களுக்கு சான்றாக அமையாது
செல்வத்தை சேமிக்க தடை இல்லை என்பதே இந்நபி மொழியின் நோக்கம்
இந்நபி மொழி ஸஹீஹானது என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அர்த்தத்தின் அடிப்படையிலும் அவர்களுக்கு இது சான்றாக அமையாது. ஏனெனில், “லி யுதய்யிப” என்ற வார்த்தைக்கு தூய்மைப்படுத்துதல் என்றோர் அர்த்தம் இருந்தாலும், இந்த நபிமொழியின் முன் பின் தொடரை கவனத்தில் கொள்ளும்போது, “அனுமதித்தல்” என்ற அதன் வேறொரு அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். காரணம், “பொன்னையும் வெள்ளியையும் சேமித்துவைத்து” என்ற வசனம் (9:34) அருளப்பட்டதும், செல்வத்தை சேமிக்க தடை வந்துள்ளதாக சில நபித் தோழர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, இறைத்தூதரிடம் விளக்கம் கேட்டபோது,
“செல்வத்தை சேமிப்பது தடை செய்யப்பட்டிருந்தால், ஜகாத்தையும், வாரிசுரிமைச் சட்டத்தையும் இறைவன் கடமையாக்கி இருக்க மாட்டான். இவ்விரண்டு சட்டங்களையும் கடமையாக்கியது, செல்வத்தை சேமிப்பதை அனுமதிப்பதற்காகத்தான் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
இதனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட நபி மொழியில் இடம் பெற்றுள்ள, “லி யுதய்யிப மா பகிய மின் அம்வாலிக்கும்” என்ற வாசகத்தை நன்கு ஆராய்ந்தால், “கடமையான ஜகாத்தை வழங்கியது போக மீதி இருக்கும் செல்வத்தை உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் சேமித்துக் கொள்ள தடை இல்லை” என்று கூறுவது தான் இந்த ஹதீஸின் நோக்கமாகும் என்பது தெளிவாகத் தெரியவரும்.
அதாவது, செல்வத்தை சேமிப்பது கூடுமா? கூடாதா? என்றுதான் இந்நபி மொழியில் பேசப்படுகிறதே தவிர, செல்வம் சுத்தமானதா? அசுத்தமானதா? என்ற பேச்சிற்கே இடமில்லை. செல்வம் சுத்தமானதா? அசுத்தமானதா? என்ற சந்தேகம் வினவப்பட்டிருந்தால், வாரிசுரிமைச் சட்டத்தைப் பற்றி இங்கு கூற வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. ஜகாத்தை மட்டும் கூறி நிறுத்திக் கொண்டிருப்பார்கள்.
“ஒரு மனிதன் சேமித்து வைப்பதில் சிறந்தது, நற்குணமுள்ள மனைவிதான்” என இதன் இறுதியில் இடம் பெற்றுள்ள செய்தி நாம் கூறிய அர்த்தத்தை மேலும் உறுதிப் படுத்துகிறது.
(“ஜகாத் வழங்கி விட்டால், செல்வத்தைச் சேமிக்கத் தடையில்லை” என்று கூறுகின்ற இந்த நபிமொழியை, இப்னு உமரும் அவ்வாறே புரிந்து கொண்டு, “எனக்கு உஹத் மலையளவு செல்வம் இருந்து, அதற்கு ஜகாத் வழங்கி விட்டால் மீதி உள்ளதை சேமித்து கொள்வதில் எக்கவலையும் அடையமாட்டேன். என்று கூறினார்கள். (பைஹகி:7021)
இதன்படி ஜகாத் வழங்குவது செல்வத்தைத் தூய்மைப்படுத்து கிறது என்ற வாதம் அடிப்படை இன்றி தகர்ந்து விடுகிறது.
[“தய்யிப்” என்ற வார்த்தைக்கு “அனுமதித்தல்” “அனுமதிக்கப்பட்டது” என்ற அர்த்தம் உண்டு என்பது அல் காமுஸுல் முஹீத் எனும் நூலில் 110 -ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
(الطيب: الحلّ, والطيب: الحلال.) (القاموس المحيط للفيروزآبادي. ص110)
அனுமதிக்கப்பட்டது என்ற அர்த்தத்தில் குர்ஆனிலும் நபிமொழியிலும் பல இடங்களில் கையாளப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.